சோளிங்கர்,
சோளிங்கரை அடுத்த கொண்டபாளையத்தில் உள்ள யோக நரசிம்மசாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநில பக்தர்களும் அதிகளவில் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மலை உச்சியில் இருக்கும் யோக நரசிம்மரை தரிசனம் செய்ய 1,305 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படியேறிச் சென்று சாமியை தரிசிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே ரோப் கார் வசதி செய்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 2001-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா ரோப் கார் அமைப்பதற்கான ஆணை பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமையில் ரோப்கார் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் சில மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றது.
பின்னர் வந்த ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் முயற்சித்தும் இப்பணிகள் நிறைவடையாமல் இருந்தது. தற்போது மீண்டும் ரூ.10½ கோடி மதிப்பீட்டில் ரோப்கார் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. கம்பி வடம் பெட்டகம் இணைக்கும் பணிகள் மற்றும் மின்சார பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 3 மாதங்களில் முடிவடையும் என்றும், சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையான ரோப்கார் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய ரோப்கார் பணி 19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியிலேயே முடிவடையும் நிலையில் உள்ளது.